தியாகதீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றுத் துப்பரவு செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் நினைவுநாளை கடந்த ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் துப்புரவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி வீரச்சாவ டைந்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் திலீபனின் நினைவுநாள் உணர்வெழுச்சியுடன் அவரது நினைவுத் தூபியில் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், நல்லூர் பின்வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி துப்புரவு செய்யப்பட்டு நினைவுநாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
அதேபோன்று நல்லூர் கோயில் முன்வீதியில் உள்ள தூபியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பால் நினைவுகூரப்பட்டது.
வடக்கு மாகாணசபையின் 102ஆவது அமர்வில், நல்லூர் பின்வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பொறுப்பேற்கப்பட்டு, துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் நேற்றுத் திடீரென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைத் துப்புரவு செய்தனர்.
இவ்வாறு துப்புரவு செய்யவுள்ளமை தொடர்பில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் முகநூலில் பதிவிட்டிருந்தனர். அதற்கு கட்சியை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.