ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு, கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கு கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்த காலம் எதிர்வரும் டிசம்பருடன் முடிவடைகின்றது. இதன்பின்னர் கட்சியின் மத்திய செயற்குழு கூடி குறித்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போதைய அரசாங்கத்துடன் முறுகல் நிலையில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பொதுக் கூட்டமொன்றிலேயே பிரதி அமைச்சர் சுஜீவ சேமசிங்கவும், அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்தும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் அரசாங்கத்துக்கு எதிராக பேசி வருகின்றார்.
தேர்தல் ஒன்று வரும்போது, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சிரமமானது என்பதை உணர்ந்து இவ்வாறு பிரிவது போன்றும், முறுகல் இருப்பது போன்றும் காட்டிக் கொள்கின்றார்களா? என்ற சந்தேகமும் பொது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.