யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களோடு இக்குற்றச் செயல்களில் தொடர்புபட்ட நபரொருவர் ஜேர்மனியில் இருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் யாழ்.குடாநாட்டின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸாருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இச் சந்திப்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னான்டோ, யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேணிஸ்லஸ், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் யாழிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொலிஸாருடன் முதலமைச்சர் மேற்கொண்ட இந்த இரண்டாவது சந்திப்பானது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11மணிவரை இடம்பெற்றது. சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடந்த மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற பொலிஸாருடன் சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்களின் நடமுறை முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பினை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவி க்கையில், கடந்த மாதங்களில் இளைஞர் குழுக்களால் மேற்கொள்ளப்பட் சமூக விரோத குற்றச் செயல்கள் தொடர்பாக இக் சந்திப்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்து ஆவா குழுவினை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
கடந்த முறை பொலிஸாருடன் மேற்கொண்ட சந்திப்பில் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில் அந் நடவடிக்கையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது கேள்வி பொலிஸாருடன் கடந்த மாதம் மேற்கொண்ட சந்திப்பில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களின் பின்புலம், அவர்களுக்கு பணம் கிடைக்கும் வழிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு கூறியிருந்தீர்கள் அது தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதா ?
பதில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுடன் தொடர்புபட்ட மற்றும் இங்குள்ளவர்களுக்கு நிதி வழங்குகின்ற நபர் ஒருவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் குறித்த நபரை கைது செய்வது மற்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டியவை நடவடிக்கைகள் தொடர் பில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.