தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள பொன்முடி, சாதாரண பரிசோதனைக்காக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய செயற்கை உணவுக்குழாய் மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இன்று மாலை கருணாநிதி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருணாநிதி ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.
அதன்பின்னர் ஓய்விலிருந்த கருணாநிதிக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.