‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்த மிக முக்கிய வெளியேற்றம் நடந்தது. மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றுவதிலும், அவர்களிடம் சண்டைக்குப் போவதிலும் ஜோடியாகச் செயல்பட்ட சக்தி, காயத்ரி ஆகிய இருவரில் சக்தி நேற்று நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
நேற்றைய ‘எவிக்ஷன்’-ல் சக்தி அல்லது காயத்ரி இருவரில் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்றுதான் கடந்த திங்கள் முதலே நேயர்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால், திடீரென காயத்ரி, பிக் பாஸ் மூலம் நிகழ்ச்சியிலிருந்து காப்பாற்றப்பட்டதால் சக்தி நேற்று வெளியேற வேண்டியதாகிவிட்டது. அதனால், குறைந்த வாக்குகளைப் பெற்றது சக்தியா, காயத்ரியா என்பது தெரியாமலே போய்விட்டது. இருந்தாலும் இந்த வாரம் காயத்ரிக்கு வாக்களிக்காமல் வெளியேற்ற வேண்டும் என நேயர்கள் நேற்றே முடிவு செய்துவிட்டார்கள்.
அரங்கை விட்டு வெளியேறும் முன் கமல்ஹாசனுடன் உரையாடினார் சக்தி. அப்போது அவர் சக்தியை ‘ட்டிரிகர்’ சக்தி என்றே குறிப்பிட்டுப் பேசினார். நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் பிறகு புரியும் என்றார். அடிக்கடி அவர் ‘ட்டிரிகர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய போதெல்லாம் அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டினார்கள். சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்நேரம் அவருக்கு அது புரிந்திருக்கும். சொந்த வீட்டில் இருக்கும் போது குடும்பத்தினரிடம் அடிக்கடி ‘ட்டிரிகர்’ என்று சொல்வேன், அது பிக் பாஸ் வீட்டிலும் தொடர்ந்தது என்று அதற்கான காரணத்தைச் சொன்னார் சக்தி.
நேற்றைய உரையாடலில் ஓவியாவை சக்தி அடிக்க முயன்றது பற்றி, கமல்ஹாசன் எதுவும் கேட்காததும், கண்டிக்காததும் ஆச்சரியமளிப்பதாக இருந்தது.
இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ படி காயத்ரியை இந்த வார ‘எவிக்ஷனுக்கு’ நாமினேட் செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. நேயர்களின் அடுத்த டார்கெட் கண்டிப்பாக காயத்ரியாகத்தான் இருக்கும்.