ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தானும் குழம்பி மக்க ளையும் குழப்புகின் றார் என்று கடுமையா கச் சாடி அறிக்கை விட்டிருக்கின்றார் தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா.
‘‘அவர் மக்களையும் குழப்புகின்றார். அவ ருக்கு தனது செய்தி கள் பத்திரிகைகளில் வராவிட்டால் ‘மண்டை’ பிளந்து விடும்போ லும். பொய்ச் செய்தி களாயினும் அவ ருக்கு மகிழ்ச்சிதான்’’ என்று அவர் அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
‘‘எங்கு கல்லெறிபட் டாலும் பின் காலைத் தூக்கும் பிராணியாக எல்லாவற்றுக்கும் தமிழ் அரசுக் கட்சியையே வலிந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்’’ என்று மிகக் கடுமையாகவு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் அரசுக் கட்சியைச் சாடும் போதெல்லாம் பொதுவாகப் பொறுமையாக இருப்பதே மாவை சேனாதிராவின் பழக்கம். எனினும் அது கட்டுமீறிச் சென்றுள்ளதை அடுத்துப் பொறுமையிழந்துள்ள அவர், அண்மையில் புளொட்டுக்கு எதிராகவும் தற்போது ஈபிஆர்எல்எவ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சன அறிக்கைகளை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சுரேஸ் பிரேமசந்திரன் இதுவரை இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைத் திட்டித் தீர்த்து வந்தார். இப்போது என்னைத் திட்ட ஆரம்பித்திருக்கின்றார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐந்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளருக்கு ஒரு வாக்கை மக்கள் அளிப்பதற்கு வேலை செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தோம். அவ்வாறே தீவிரமாகச் செயலாற்றினோம். அப்போது சுரேஸ் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அவர் மறந்திருக்கக்கூடும்.
வடக்கு மாகாண சபையில் பொ.ஐங்கரநேசன் அமைச்சருக்கு எதிராக ஊழல் குற்ற விசாரணை நடத்த வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்றவர் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன். அதன் பின்னர் அனைத்து ஊழலுக்கு எதிராகவும் சட்டபூர்வமான சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டுமென்று தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி தீர்மானம் கொண்டு வந்தார். அது இப்பொழுதும் இருக்கிறது. ஆனால், தமிழ் அரசுக் கட்சி ஊழலை ஆதரிக்கிறது என்று பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
மூவர் அடங்கிய விசாரணைக்குழுவை நியமித்த முதலமைச்சர் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கவில்லை. நெருக்கடி வந்த பின் அந்த அறிக்கையை சபையில் வைத்து பிரபலமாக்கினார். அதுதான் பிரச்சனையின் ஆரம்பம்.
பின்னரும் அந்தக் குழுவின் பரிந்துரையின்படி செயற்படவில்லை. மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்த பின் அமைச்சர்கள் தொடர்பில் நாம் தீர்மானிப்போம் என்று கூறிய முதலமைச்சர், அதற்கு மாறாகச் செயற்பட்டமையினால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரையிலான பிரச்சினை ஏற்பட்டது. இதனை அவரிடமே நான் கூறியுள்ளேன். அதற்கு அவர் தந்த பதில் ஆச்சரியமாக இருந்தது.
முதலமைச்சர் இல்லத்தில் கடந்த 5ஆம் திகதி நடந்த கூட்டத்தில், சுரேஸ்பிரேமசந்திரன் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவரது குடும்பத்தினரை வலிந்து இழுத்து அவர்கள் ஊழல் செய்தனர் என்றும் அதற்கு ஆதாரங்கள் உண்டு என்றும் வாதிட்டுக் கொண்டிருந்தார். உண்மைக்கு மாறான இந்தப் பேச்சை முதலமைச்சர் ஆதரித்தார்.
திருமதி அனந்தி சசிதரனை அமைச்சராகத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நியமித்தார் என்று முதலமைச்சர் கூறினார். அப்பொழுதும் அவரை நீக்கும்படி நாம் கோரவில்லை. அவர் மீது இருந்த ஒழுங்கு நடவடிக்கை பற்றியே கூறியிருந்தேன். அவரைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்கியதாகக் கடிதம் தாருங்கள் என்று கேட்டுப் புதிய ஓர் அரசியல் பிரச்சினையை முதல்வர் உருவாக்கினார்.
இனத்தின் ஒற்றுமைக்காக அமைச்சுப் பதவிகளுக்குப் போட்டியிடாமல் முதலமைச்சர் விரும்பியவாறு சுமுகமாக வினைத்திறனுடன் அமைச்சரவையை அமைக்கவும், மாகாண சபையை நெருக்கடியின்றி நிர்வகிக்கவும், இனப்பிரச்சனை மற்றும் ஏனைய பிரச்சனைகளின் தீர்வுக்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவும் தமிழ் அரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் உறுதிபடக் கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
ஆனால் எங்கு கல்லெறிபட்டாலும் பின் காலைத் தூக்கும் பிராணியாகத் தமிழரசுக் கட்சியையே வலிந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். இது அவர்கள் பழக்க சுபாவம்.
வடக்கு மாகாண அமைச்சரவையில் பதவிக்கு போட்டியிட்டு அடிபடாமல், முதலமைச்சரின் விருப்பத்தின்படி அமைச்சர்களை நியமிப்பதற்குத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் வழிசமைத்து விட்டார்கள் என்பதை சுரேஸினால் ஜீரணிக்க முடியவில்லை. கலகம் ஏற்படுத்த முனைகின்றார்.
கூட்டமைப்புத் தலைமையை அகற்றவேண்டும் என்றார். தலைமைப் பொறுப்பை முதலமைச்சரை ஏற்குமாறு தொடர்ந்து பேசினார். அறிக்கை விட்டார். முதலமைச்சர் அதில் எடுபட்டார் போன்று தெரியவில்லை. சுரேஸூக்கு அது எரிச்சலாக இருக்கிறது.
வட மாகாணசபையில் ஏற்பட்ட பிரச்சினைகளையே தொடர்ந்தும் அறிக்கைகளை விடுத்துக் குழப்பிக் கொண்டிராமல் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு முதலமைச்சர் மாகாண சபையை நடத்திச் செல்ல இடம் விடுவதுதான் இன்று பொருத்தமான செயலாகும் – என்றுள்ளது.