திண்டுக்கல் அருகே பொது சுவற்றில் அழகான ஓவியங்களை பெயர் தெரியாத ஒருவர் தீட்டுகிறார். அந்த ஓவியங்களைப் பார்த்த மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். திண்டுக்கல்- பழநி சாலையில் சுவர் ஓவியங்களை ஒருவர் மிக அற்புதமாகவும் தத்ரூபமாகவும் வரைகிறார். இதற்காக அவர் சிறப்பு வண்ணக் கலவைகளைப் பயன்படுத்துவது இல்லை. பிரத்யேகமாக பிரஷ்கள் கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
பார்ப்பதற்கு மிக எளிமையாக, வறுமையால் பாதிக்கப்பட்டவரைப் போல் ஒடுங்கிய கன்னங்கள், அடர்ந்த தாடி, பல நாட்களாக துவைக்காத ஆடையுடன், தன் விரல்களில் சிறிது நேரத்தில் பேரற்புதத்தை நிகழ்த்தி விடுகிறார். ஓவியம் வரைய கரித்துண்டுகள், செங்கல் பொடி, சாக்பீஸ் துண்டுகள் மற்றும் சில இலைகள் என மிகச் சில பொருட்களையே பயன்படுத்துகிறார். ஆனால் அதி அற்புதமான ஓவியங்களை வரைகிறார். அவர் வரையும் ஓவியங்கள் இன்றைய டிஜிட்டல் உலகின் 3டி ஓவியங்களுக்கு சவால் விடும்படியாக உள்ளன. பெரும்பாலும் இயற்கை காட்சிகளையே ஓவியங்களாக வரைகிறார். அந்த ஓவியங்களைப் பார்க்கும் மக்கள் மெய் மறந்து நிற்கின்றனர். மேலும், பொதுமக்கள் அவரின் திறமையை பாராட்டும் விதமாக தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கின்றனர். ஆனால், அவர் பெயர் மற்றும் ஊர் என எந்த தகவலும் தெரியவில்லை. அவர் யாருடனும் உரையாடுவதும் இல்லை.