யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்வு யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தி மைதானத்தில் நேற்று மாலை ஆறு மணிக்கு நடைபெறவிருந்தது. ரிக்கெற் காட்சியாக நடைபெறவிருந்த குறித்த நிகழ்வில் உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்தரா உன்னிக்கிருஷ்ணனும் பாடவிருப்பதாக விளம்பரங்களில் அறிவித்தல் செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் தற்பொழுது இது திடீரென ரத்தாகியுள்ளமையினால் யாழ்ப்பாண மக்கள் ஏமாற்றம் வெளியிட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பே இசை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதற்கு காரணம் என பொதுவாகக் கூறப்பட்டாலும் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மறு அறிவித்தல்வரை னிகழ்வை இரத்துச் செய்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்வில் உன்னிக்கிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். சங்கிலியன் தோப்பில் நடந்த இந்த நிகழ்வில் அப்போதைய அமைச்சராக இருந்த ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உன்னிக்கிருஷ்ணனுக்கு மேடையில் பொன்னாடை போர்த்தியதோடு தனது நினைவுப் பரிசையும் வழங்கினார்.
அதன்பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் உன்னிகிருஷ்ணனுக்கு எதிர்ப்புக் கிழம்பியிருந்தது. இதையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் கைகளால் கௌரவம் பெற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாக உன்னிக்கிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதற்கு டக்ளஸ் தேவானந்தாவும் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு யாழ் நகரப்பகுதியெங்கும் உன்னிக்கிருஷ்ணனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மக்கள் எனும் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.