டெஸ்ட் போட்டிக்கான ‘ரேங்கிங்’ பட்டியலில் சிறந்த பவுலர், ‘ஆல்–ரவுண்டர்’ என இரண்டு பிரிவிலும் ஜடேஜா, ‘நம்பர்–1’ இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. இதன் ‘ஆல்–ரவுண்டருக்கான’ பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா ஒரு இடம் முன்னேற்றம் அடைந்து முதலிடம் பிடித்தார். சமீபத்திய, இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் 70 ரன்கள் எடுத்த இவர், 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்த செயல்பாட்டின் காரணமாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆனால், இந்த டெஸ்டில் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறிய ஜடேஜாவுக்கு வரும் 12ல் துவங்கவுள்ள 3வது டெஸ்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘நம்பர்–1’ மகிழ்ச்சியை அதிக நாட்கள் கொண்டாடுவாரா எனத்தெரியவில்லை.
வங்கதேச வீரர் சாகிப் ஒரு இடம் பின்தங்கி, 2வது இடத்தை அடைந்தார். 3வது இடத்தில் அஷ்வின் உள்ளார்.
புஜாரா முன்னேற்றம்:
பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கொழும்பு டெஸ்டில் சதம் அடித்த இந்தியாவின் புஜாரா (3) மற்றும் ரகானே (6) முறையே ஒன்று, 5 இடம் முன்னேறி உள்ளனர். இந்திய கேப்டன் கோஹ்லி தொடர்ந்து 5வது இடத்தில் நீடிக்கிறார்.
பவுலர்கள் தரவரிசையை பொறுத்தவரை அஷ்வின் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தை பிடித்தார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் ஜடேஜா நீடிக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் இந்தியா, தென் ஆப்ரிக்கா தொடர்ந்து உள்ளது. ஆஸ்திரேலியா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
‘டாப்–6’ பேட்ஸ்மேன்கள்:
ரேங்க் வீரர் புள்ளி
1 ஸ்மித் (ஆஸி.,) 941
2 ரூட் (இங்கி.,) 891
3 புஜாரா (இந்தியா) 888
4 வில்லியம்சன் (நியூசி.,) 880
5 கோஹ்லி (இந்தியா) 813
6 ரகானே (இந்தியா) 776
‘டாப்-3‘ பவுலர்கள்:
ரேங்க் வீரர் புள்ளி
1 ஜடேஜா (இந்தியா) 893
2 ஆண்டர்சன் (இங்கி.,) 860
3 அஷ்வின் (இந்தியா) 842
‘டாப்–3’ ஆல்–ரவுண்டர்கள்:
ரேங்க் வீரர் புள்ளி
1 ஜடேஜா (இந்தியா) 438
2 சாகிப் (வங்கம்) 431
3 அஷ்வின் (இந்தியா) 418
அணிகளின் தரவரிசை
ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 123
2 தென் ஆப்ரிக்கா 110
3 இங்கிலாந்து 105
4 ஆஸி., 100
5 நியூசி., 97
6 பாக்., 93
7 இலங்கை 92
8 வெ.இண்டீஸ் 75
9 வங்கதேசம் 69
10 ஜிம்பாப்வே 0