குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களைப் பொலிஸார் கைது செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்களைக் கைது செய்து ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்துவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
துன்னாலைப் பகுதியில் தொடர் சுற்றி வளைப்புக்கள், கைதுகள் தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் மக்களுடைய ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள், வெகுஜனப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக யாழ். துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புக்கள், தொடர் கைதுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மணல் ஏற்றிச்சென்ற இளைஞரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதியற்ற ஒரு சூழல் உருவானது.
அப்பகுதி மக்கள் வீதிகளில் ரயர்களை எரித்துக் குறித்த சம்பவத்துக்குத் தங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் தொடர்பில் எல்லை மீறிப் பொலிஸார் செயற்பட்டுள்ளனர் என பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் தற்போதுவரை பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் போர்க் காலத்தில் இடம்பெற்றது போன்று விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து துன்னாலையில் தொடர்ச்சியான பாரிய சுற்றி வளைப்புக்களை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சருடன் அப்பகுதி மக்கள் நடத்திய சந்திப்பையடுத்து முதலமைச்சரின் நடவடிக்கைகளால் இன்றைய தினம் பதற்ற நிலை தணிந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் துன்னாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக எனது கவனத்திற்குக் கொண்டு வருமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
அவ்வாறான சூழ்நிலை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் நான் நேரடியாகத் துன்னாலைப் பகுதிக்குச் சென்று வடமாகாண முதலமைச்சரூடாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.