ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் ஒரு சீன இளம் விமானி இறந்தார்.
இதுகுறித்து விக்டோரிய மாகாண போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது,
சீனாவைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் பயிற்சி விமானியாக உள்ளார். அவரது வயது 19. பெயர் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இரு இருக்கைகள் மட்டுமே கொண்ட அட்ராலைட் பிளானில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவ்விமானத்தில் தனது பயிற்சியாளருடன் வானிலிருந்து தரையில் இறங்குவதற்காக முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் தரையில் வந்து மோதி நொறுங்கியதில் பயிற்சி விமானியும் விமான பயிற்சியாளரும் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் சீன இளம் பயிற்சி விமானியின் உயிர் பிரிந்தது. தற்போது விமான பயிற்சியாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து சிவில் விமான பாதுகாப்பு ஆணைய செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஜிப்சன் கூறுகையில், “வானில் விமானப் பயிற்சிமேற்கொள்ளப்பட்ட பயிற்சி விமானத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறக்கம் செய்யப்படுவதற்கு முன் அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை ஒலிபரப்பினார்கள்”என்றார்.
விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய காவல்துறை மற்றும் விமான ஆணையமும் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது.