கொழும்பு டெஸ்டில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ இலங்கையின் கருணாரத்னே, சண்டிமால், மாத்யூஸ் அவுட்டாகினர்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என, முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 622/9 (‘டிக்ளேர்’), இலங்கை 183 ரன்கள் எடுத்தன. பின், ‘பாலோ–ஆன்’ பெற்ற இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே (92), புஷ்பகுமாரா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே, முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதமடித்தார். அஷ்வின் பந்தில் ‘நைட் வாட்ச்மேன்’ புஷ்பகுமாரா (16) போல்டானார். ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் சண்டிமால் (2) சிக்கினார்.
அடுத்து வந்த மாத்யூஸ், ஜடேஜா வீசிய 80வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ கருணாரத்னே (141), மாத்யூஸ் (36) அவுட்டாகினர்.
உணவு இடைவேளைக்கு பின், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்து, 124 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.