இலங்கையில் சிறுநீரக பிரச்சினையுள்ள 8 மாவட்டங்களில் அதிக பிரச்சினையுள்ள மாவட்டங்களாக கிளிநொச்சியும் முல்லைத்தீவும் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சா் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலத்துக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:
இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். வவுனியாவில் உள்ள கிணறுகளில் கனியுப்புகள் அதிகம். வயல்களில் பெரும்பாலானோர் கிருமிநாசினி, களைகொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். அதன் தாக்கம் குடி தண்ணீரிலும் ஏற்படுகிறது. கிணற்று நீருக்கும் நஞ்சு செல்கிறது. இவற்றால் சிறுநீரக பிரச்சினைனைகள் உருவாகின்றன.
வவுனியாவில் புதுக்குளம் சாஸ்திரிகூளாங்குளப்பகுதியிலும் அதிகமாக சிறுநீரகப் பிரச்சினையுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்குப் பிரதான காரணமாக இருப்பது எம்மில் பலர் தண்ணீர் குடிப்பது குறைவு. எங்களிடமிருந்து வெளியேறும் வியர்வைக்கு ஏற்ப நாங்கள் தண்ணீர் குடிப்பதில்லை. அதனாலும் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. உயர்குருதி அமுக்கம், சலரோகம் போன்ற நோய்கள் நாள் கடந்து செல்லும்போதும் சிறுநீரக நோய் ஏற்படும்.
சிறுநீரக நோயின் ஆரம்பக்கட்டத்தை இனம் காண்பதற்கு செட்டிக்குளத்திலும், மாமடுவிலும் அதற்குரிய சிறப்பு இயந்திரம் மருத்துவமனையில் உள்ளது. முல்லைத்தீவில் மல்லாவியிலும் மணலாற்றிலும் உள்ளது. ஒரு இயந்திரத்தின் பெறுமதி இரண்டரை கோடியாகும்.
இன்று இளம் வயதில் பலர் சிறுநீரக நோயால் இறந்து போகிறார்கள் அதனைத் தடுக்கவேண்டும்.
பலா் கடன்களைப் பெற்று தொலைக்காட்சி, அன்ரனா போன்றவற்றை வாங்குகின்றார்கள். அவற்றை வாங்குவதைவிட தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வாங்கி வீட்டில் நீரை சுத்திகரித்து பருகுவதன் மூலம் சிறுநீரக நோயை தடுக்க முடியும் – என்றார்