205 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று கோலாகலமாக துவங்க உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பலநாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்டின் திறமையை காணவே ரசிகர்கள் அதிக ஆவல் கொண்டுள்ளனர்.
காரணம் இந்த போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார். குறுகிய தூர ஓட்டங்களில் அசைக்க முடியாதவராக வலம் வரும் போல்ட், இன்று 100 மீட்டர் தகுதிப் போட்டியில் களமிறங்குகிறார். உலகின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் அமெரிக்கா அதிக பதக்கங்களை வேட்டையாட ஆர்வம் காட்டி வருகிறது.
செய்தியாளளர்களிடம் பேசிய அமெரிக்காவை சேர்ந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தய வீரரான கிரிஸ்டியன் கோல்மேன், உசைன் போல்ட், டைசன் கே, ஐஸ்டின் காட்லின் ஆகியோர் எப்படிப்பட்ட வீரர்கள் என்பது உலகிற்கு தெரியும். அனைவரும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜாம்பவான்கள். அவர்களுடன் நான் போட்டியி்ட உள்ளது எனக்கு கிடைத்த வரம். அவர்களுடன் போட்டியிட எனக்கு தகுதி இருப்பதாகவே நினைக்கிறனே் என்றார்.
அதற்கு தயாராகவும் உள்ளேன் என்றார். ஜாம்பவான்கள் பலர் களமிறங்கும் இத் தொடரில் இந்தியாவில் இருந்து சுமார் 25 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் 19 வயது நீரஜ் சோப்ரா மட்டுமே நம்பிக்கை வீரராக உள்ளார். உலக ஜூனியர் போட்டியில் நீரஜ், 86.48 தூரம் ஈட்டியை பறக்க விட்டு உலக சாதனை படைத்துள்ளார். உலக தடகளத்தை பொறுத்த வரை 125 கோடிக்கும் மேலான மக்களை கொண்ட இந்தியா கத்துகுட்டி தான்.
இதனால் தகுதி சுற்றுகளை தாண்டினாலே அது பெரிய விஷயம். இந்தியா கடைசியாக 2003-ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.