`தமிழக இளைஞர்களுக்கு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் வரப்பிரசாதமாக உள்ளது” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 2-வது சீஸன் போட்டி தொடங்கி, சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சார்பில் இந்த கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளர் பிரெட் லீ, தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் அவர், நேற்று தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை கிராமத்துக்கு வந்தார். தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருடன் அவர் பீச் வாலிபால் விளையாடினார். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு அணியாகவும், மாணவியர் ஒரு அணியாகவும் இந்த காட்சிப் போட்டியில் விளையாடினர்.
கடற்கரை வாலிபால் போட்டியில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஜெர்ஸ்லின், மரிய மிக்கேல் நிசா ஆகியோர், பிரெட் லீயின் அணியில் இடம் பெற்றிருந்தனர். இப்போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக தருவைகுளம் கிராமத்துக்கு வந்த பிரெட் லீயை ஆலய பங்குத்தந்தை எட்வர்டு, முன்னாள் ஊராட்சித் தலைவர் மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரெட் லீ, “மாணவ, மாணவியர் சிறப்பாக விளையாடுகின்றனர். இப்பகுதியில் மாநில, தேசிய அளவில் சிறந்த வாலிபால் வீரர்கள் இருப்பதை அறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த இங்கே வந்தேன். டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இது கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்” என்றார் .
இதற்கான ஏற்பாடுகளை தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஆண்டனி ரவிகாந்த், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் வி.ஆர்.சிவக்குமார், துணைச் செயலாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.