குறுகிய காலத்தில் கேப்டன்சியில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவரும் விராட் கோலி, தலைமைத்துவத்தில் தோனியின் பாதையில்தான் செல்கிறார் என்று ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
வங்காள நாளிதழ் ஒன்றில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:
அவர் (தோனி) இரண்டு உலகக்கோப்பைகளை தன் கேப்டன்சியில் வென்றுள்ளார், ஒன்று 50 ஓவர் உலகக்கோப்பை, இன்னொன்று டி20. ஒரு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இன்னொரு உலகக்கோப்பை டி20-யில் அவர் கேப்டன்சியில் இந்திய அணி ரன்னராக வந்தது. மேலும் இரண்டு உலகக்கோப்பை டி20-யில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளோம். 2015 உலகக்கோப்பையிலும் அரையிறுதி வரை முன்னேறினோம்.
பொதுவாக தோனியின் ஒருநாள், டி20 சாதனைகளையே பலரும் பேசுவார்கள் ஆனால் டெஸ்ட் கேப்டன்சி ரெக்கார்டையும் எடுத்துப் பார்த்து பிற கேட்பன்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் யார் கிரேட்டஸ்ட் கேப்டன் என்பது தெரியவரும்” என்று சாஸ்திரி தோனியை ஒரு தூக்குத் தூக்கியுள்ளார்.
மேலும் விராட் கோலி பற்றி கூறிய போது, “தோனியின் திசையில்தான் கோலியும் முன்னேறி வருகிறார்” என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களில் தோனி கேப்டன்சியில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது பற்றி ரவிசாஸ்திரி எதுவும் குறிப்பிடவில்லை.