பழைய அணியில் மிகப்பெரிய பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் ஆடிய இந்திய அணியினால் இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை, கோலி தலைமையிலான இந்த அணியே இதனைச் சாதித்துள்ளது என்று ரவி சாஸ்திரி பட்டவர்த்தனமாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:
இந்த இந்திய அணியில் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் 2 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர். இப்போது இவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இதற்கு முந்தைய இந்திய அணியும், மிகப்பெரிய தலைகளும், பெயர்களும் சாதிக்காததை இந்த இந்திய அணி கோலி தலைமையில் சாதித்துள்ளது. உதாரணமாக 2015-ல் இலங்கையில் தொடரை வென்றது.
இந்திய அணியில் மிகப்பெரிய தலைகள், 20 ஆண்டுகள் ஆடிய மிகப்பெரிய பெயர்கள் இலங்கைக்கு பலமுறை வந்து ஆடியுள்ளனர். ஆனால் டெஸ்ட் தொடரை அவர்கள் இங்கு வென்றதில்லை. இந்த இந்திய அணி அதனைச் செய்துள்ளது.
மேலும் அயல்நாடுகளில் முந்தைய இந்திய அணிகள் செய்யாததை ஏற்கெனவே இந்த இந்திய அணி செய்யத் தொடங்கி விட்டது.
கோலி இன்னமும் இளைஞர்தான், முதல் டெஸ்ட் போட்டியில் நான் அவரை கேப்டனாகப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இவர் கேப்டன்சி செய்த போது நான் இருந்தேன். இப்போது 27 டெஸ்ட் போட்டிகள் ஆடியாகிவிட்டது, எனவே வித்தியாசம் தெரியவே செய்யும்.
உடல் மொழியில் முதிர்ச்சி தெரிகிறது. அவர் வயதுக்கு அவர் நிறையவே பங்களிப்ப்புச் செய்து விட்டார். மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அடையாளங்கள் அவரிடம் தெரிகிறது.
நான் இயக்குநராக இருந்த போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலவரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை, புதிதாக எந்த ஒரு விசையையும் நான் முடுக்க வேண்டியதில்லை.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று அயல்நாட்டு தொடர்கள் வருகின்றன, இவை மிகக்கடினமானவை, ஆனால் நான் அவற்றை ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன். இந்த அணி அங்கு மற்ற இந்திய அணிகள் செய்யாததைச் செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.