ஓவலில் சுவர் போல் நின்று சதம் அடித்தும் தோல்வியிலிருந்து மீள முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கர், தொடக்க வீரர் என்றால் அடி வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த சத இன்னிங்ஸில் எல்கருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது, 2வது பந்தே பிராடிடம் எல்.பி.ஆகியிருப்பார், அலிம் தார் தீர்ப்பினால் பிழைத்தார். பிறகு 9 ரன்களிலிருந்த போது ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எட்ஜ் செய்தார் ஆனால் 3-வது ஸ்லிப்பில் கீட்டன் ஜெனிங்ஸ் தாழ்வாக வந்த வாய்ப்பை தவற விட்டார்.
73 ரன்களில் இருந்த போது மீண்டும் பிராட் பந்தை லெக் திசையில் ஆட முயற்சி செய்து பந்து கேட்ச் ஆனது, ஆனால் முறையீடு வலுவாக இல்லை.
இதற்கிடையே ஓரிருமுறை உடம்பில் அடிவாங்கினார் எல்கர், 33 ரன்களில் இருந்த போது டோபி ரோலண்ட்-ஜோன்ஸ் பந்தில் இடுப்பில் அடி வாங்கினார். ஏற்கெனவே பீல்டிங்கில் விரலில் அடிபட்டிருந்த நிலையில், பென் ஸ்டோக்சின் எழும்பிய பந்து ஒன்றில் அதே விரலில் அடி வாங்கினார்.
இது குறித்து எல்கர் கூறும்போது, “நான் அடி வாங்கக் கூடாது என்றே விரும்புவேன், ஆனால் சில வேளைகளில் அடிவாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. அடி வாங்குவது என்னை வேறு ஒரு மனநிலைக்குக் கொண்டு செல்கிறது. இது ஒரு சவால். ஒரு தொடக்க வீரர் அப்படித்தான் பார்க்க முடியும். விரலில் பேண்டேஜ் உள்ளது, நான் அதை அகற்றப்போவதில்லை.
எக்ஸ் ரே எடுக்க மாட்டேன் அது பண விரயமே. இது இப்படியே போகட்டுமே. இதுதான் என்னை நகர்த்திக்கொண்டு செல்கிறது. நான் இதனை மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன். இங்கிலாந்து அணி நன்றாக விளையாடும் போது அதிகம் பேசுவார்கள், களத்தில் சிலபல வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள்.
நாங்களும் அவர்கள் நிலையில் இருந்தால் அப்படிச் செய்வோம்.
பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒருவரை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியே. அவர் பெரிய போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடியவர். அவருடன் மோதுவது சிறப்பானது. தனிநபர்களுக்கிடையே இப்படிப்பட்ட போக்குகள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை மற்ற வடிவங்களை விட சுவாரசியமாக வைத்துள்ளது”
இவ்வாறு கூறினார் எல்கர்.