‘விவேகம்’ தணிக்கை முடிந்து வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவித்தவுடன், தங்களுடைய படங்களின் வெளியீட்டு தேதியை இறுதி செய்ய பல்வேறு படங்கள் காத்திருக்கின்றன.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இறுதிகட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இப்படத்தை தணிக்கை அதிகாரிகள் நாளை (ஜூலை 31) பார்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை பணிகளைப் பொறுத்து, ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டை உறுதி செய்யும் என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், ‘விவேகம்’ வெளியீட்டு தேதியைப் பொறுத்தே ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட பல படங்கள் தங்களுடைய வெளியீட்டை முடிவு செய்ய உள்ளார்கள். தணிக்கைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துமே முடிந்துவிட்டதால், ‘விரைவில்’ என போஸ்டரில் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ற தேதியை தேர்வு செய்யவுள்ளது படக்குழு
‘விவேகம்’ தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.