கிட்டத்தட்ட 50 ஜோந்தாமினர்கள், ஒரு உலங்குவானூர்தி இணைந்து ஒரு இளம்பெண்ணை தேடியுள்ளனர்.
Lozère மாவட்டத்தில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய பெண் ஒருவர் Puy-en-Velay இல் வசிக்கும் தனது காதலனுக்கு தாம் கடத்தப்பட்டுள்ளதாக குறுந்தகவல் (SMS) ஒன்று அனுப்பியுள்ளார். இரண்டு பேர் சேர்ந்து தம்மை கடத்தியுள்ளதாகவும், கறுப்பு நிற BMW மகிழுந்து ஒன்றுக்குள் தாம் கை கால்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் இருப்பதாகவும் காதலனுக்கு அறிவித்துள்ளார். இதனால் கலவரமடைந்த குறித்த காதலன் ஜோந்தாமினர்களுக்கு இந்த செய்தியை அறிவித்துள்ளார். குறித்த இளம்பெண்ணை கண்டுபிடிக்கும் நோக்கில் 50 ஜோந்தாமினர்கள் களத்தில் இறங்கினர். ஒரு உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், குறித்த பெண் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஜோந்தாமினர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த பெண்ணை கடத்தல் தொடர்பாக விசாரித்ததில் ஒன்றுக்கு ஒன்று எதிராக பதில்கள் அளித்துள்ளார். அதன்பின்னர் ஜோந்தாமினர்கள் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் குறித்த பெண் கடத்தப்படவே இல்லை எனும் உண்மை தெரியவந்துள்ளது. குறித்த பெண் கடந்த வார இறுதி விடுமுறைய 80 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் கழிக்க சென்றுள்ளார்.
பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 9 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.