இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வோக்ஸ்வேகன் வென்டோ கார், மெக்ஸிகோவில் விற்பனையில் அசத்திவருகிறது. இந்தியாவில், குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் மற்றும் குறைந்த அளவிலான உற்பத்தி சார்ந்த செலவுகள் இருப்பதன் காரணமாக, உற்பத்தியாளர்களுக்கு இந்தியா மிக முக்கிய ஏற்றுமதித் தளமாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிசான் மற்றும் மாருதி சுசூகி போன்ற மற்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், வோக்ஸ்வேகன் இந்தியா அதிக கார்களை ஏற்றுமதிசெய்துள்ளது.
வோக்ஸ்வேகன், இந்தியா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள 35 நாடுகளுக்கும் மேல் கார்களை ஏற்றுமதிசெய்துவருகிறது. இதுவரை, இந்த நாடுகளுக்கு 3,10,000-க்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதிசெய்துள்ளது. இதில், பாதிக்கும் மேற்பட்ட கார்கள், வோக்ஸ்வேகன் இந்தியாவின் புனே ஆலைகளில் தயாரிக்கப்பட்டது. வட அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோவுக்கு, வோக்ஸ்வேகன் இந்தியா 2,10,000 யூனிட் வென்ட்டோ கார்களை ஏற்றுமதிசெய்து சாதனை படைத்துள்ளது. வோக்ஸ்வேகன் இந்தியா 2013-ம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோவுக்கு கார்களை ஏற்றுமதிசெய்துவருகிறது. மெக்ஸிகோவின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் வோக்ஸ்வேகன் வென்டோ கார் மூன்றாவது இடத்தைப் பிடித்து விற்பனையில் அசத்திவருகிறது.