நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரத்தில், பிரசித்திபெற்ற காலபைரவர் கோயில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷமடைந்த பைரவர், திருவலஞ்சுழி ஈசனை வேண்ட, அவர், கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது விழுந்த இடம்தான் சேத்திரபாலபுரம் இந்திர தீர்த்தம். அதில் நீராடினால் தோஷம் அகலும். ’நீ அங்கேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசிபுரிவாயாக’ என்று பைரவருக்கு ஈசன் கூறினார் என்பதுதான் தலவரலாறு.
தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்ய வருகின்றனர். ஆனால், கோயிலில் தீர்த்தம் வழங்கக்கூடிய வளாகத்தில் உள்ள குளம், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கோயில் குளத்தைத் தூர் வாரி, சுற்றுச்சுவர், படிக்கட்டுகள் மற்றும் குளத்தின் மையப்பகுதியில் தீர்த்தம் வழங்குவதற்கான நீராழி மண்டபம் ஆகியவை அமைத்துச் சீரமைக்க, தமிழக அரசு ரூ.32 லட்சத்து 18 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்திருக்கிறது.
தற்போது, முதல்கட்டமாக குளத்தைத் தூர் வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, பக்தர்கள் கோயில் வளாகத்தில் உணவு சாப்பிடும் கூடம் அமைத்துத் தரவேண்டும்| என்று வேண்டுகோள் விடுக்க, அதையும் நிச்சயம் அமைத்துத் தருவேன் என்று உறுதியளித்தார். ஆக, காலபைரவர் கோயில் இந்திர தீர்த்தம் விரைவில் புதுப் பொலிவு பெறும்.