விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இவர் தற்போது துல்கர் சல்மானை வைத்து சோலோ என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டைரக்டர் மணிரத்னம் கலந்து கொண்டார்.
நேற்று துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக மணிரத்னம் மேடையில் ஏறியதும், துல்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போதே படத்தை பார்க்க வேண்டும் போல் ஆர்வம் ஏற்படுகிறது என்றார்.
முன்னதாக பேசிய துல்கர்சல்மான், நான் தமிழில் நடித்த முதல் படம் வாயை மூடி பேசவும். அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு மணிரத்னம் தான் சிறப்பு விருந்தினராக வந்து என்னை வாழ்த்தினார். அதன்பிறகு அவரது இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தேன். அப்போதும் என்னை அவர் வாழ்த்தினார்.
அதையடுத்து இப்போது தமிழில் எனது மூன்றாவது படமாக சோலோ படத்தில் நடித்திருக்கிறேன். இப்போதும் மணிரத்னம் என்னை வாழ்த்த வந்திருக்கிறார். ரொம்ப பெருமையாக உள்ளது. அதனால் நான் ரொம்ப லக்கியாக கருதுகிறேன் என்றார் துல்கர் சல்மான்.