தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 70 ஆண்டு மன்னராக ஆட்சி புரிந்த, பூமிபால் அதுல்யதேஜ், கடந்த ஆண்டு மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின், மஹா வஜ்ரலாங்கோர்ன், 65, மன்னராக பதவியேற்றுக் கொண்டார். நேற்று, வஜ்ரலாங்கோர்னின் பிறந்த நாள்.
பழைய மன்னரின் மறைவை நாட்டு மக்கள் இன்னும் மறக்காத நிலையில், புதிய மன்னரின் பிறந்த நாள் எளிமையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, அரண்மனை முன், 600க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் வரிசையில் நின்று, ராணுவ தலைவர், பிரயூத் சான் – ஓ – சே மற்றும் பிற அதிகாரிகளிடம் தானம் பெற்றனர்.
மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்நாட்டு தபால் துறை, அவர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை வெளியிட்டது. அதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
நாட்டு மக்கள் மற்றும் துறவிகள், மன்னரின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், மன்னர், வஜ்ரலாங்கோர்ன் அரண்மனையில் இருந்தாரா அல்லது வெளிநாட்டில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.