ஆர்மீனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, Volterman Smart Wallet என்ற பாதுகாப்பான பர்ஸை உருவாக்கியிருக்கிறது. இதுவரை உலகத்திலிருக்கும் பர்ஸுகளிலேயே இதுதான் மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள்.
இந்த பர்ஸுக்குள் அலாரம், ஜிபிஎஸ், கேமரா போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பர்ஸுக்கான அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பர்ஸை எங்காவது தவறவிட்டுவிட்டால் சில நிமிடங்களில் போனில் அலாரம் அடிக்கும்.
பர்ஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தைக் காட்டும். எடுத்தவர் பர்ஸைப் பிரித்தால் கேமரா மூலம் அவரது முகம் படம் பிடிக்கப்பட்டு, ஸ்மார்ட்போனுக்கு வந்துசேரும். மிகக் குறைந்த நேரத்தில் பர்ஸ் எடுத்தவரைப் பிடித்துவிடலாம். ஸ்மார்ட்போனும் பர்ஸும் இணைந்து வேலை செய்கின்றன. ஸ்மார்ட்போனை எங்காவது மறந்து வைத்துவிட்டால், பர்ஸ் அலாரம் அடித்து உங்களுக்கு போன் குறித்து நினைவூட்டும்!
உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஜிபிஎஸ் உதவியுடன் பர்ஸைக் கண்டுபிடித்துவிட முடியும். Radio frequency identification தொழில்நுட்பம் திருடரைக் காட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கடன் அட்டைகள், பாஸ்போர்ட் போன்றவற்றுக்கான கவர்களும் இதே தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார்கள்.
“உலகத்தில் பர்ஸ் திருட்டுதான் அதிகம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்து, மூன்று ஆண்டுகளாக வேலை செய்தோம். இன்று அதைச் சாதித்து விட்டோம். பர்ஸ் திருடுபவரின் போட்டோவே நம் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும், இருக்கும் இடத்தையும் காட்டிவிடும். நாமே நேரில் சென்று பர்ஸை வாங்கிவிடலாம்.
அலைச்சல் இல்லை. பதற்றம் இல்லை. பாஸ்போர்ட் கவர், கார்ட் ஹோல்டர் விலை சற்றுக் குறைவாகவும் பர்ஸ் விலை அதிகமாகவும் வைத்திருக்கிறோம். 12 ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு பர்ஸ் வாங்கிவிட முடியும்” என்கிறார் நிறுவனர் ஆஸாட் டோவ்மாஸ்யன்.