ஜனாதிபதி டொனால்டு டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமெரிக்க-ஆஸ்திரேலிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய படைகளின் கூட்டுப் பயிற்சியை வடகிழக்கு பகுதியில் இருந்து சீனா கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியானது.
இதனிடையே, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஸ்காட் ஸ்விப்ட், ஜனாதிபதி டொனால்டு டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை எதிர்த்து போரிடவும், உயர் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கவும் உறுதிமொழி ஏற்றுள்ளனர்” என்றார்.
தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு அவ்வவ்போது சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகளுக்கு அருகில் ரோந்து கப்பல்களையும் அனுப்பி சீனாவை சீண்டுகிறது. சீன எல்லையில் அமெரிக்க போர் விமானம் நுழைந்து அதனை அந்நாட்டு ஜெட் விமானங்கள் இடைமறித்த சம்பவங்களும் இருமுறை நடந்துள்ளது.
தென் சீன கடல் சர்ச்சை ஒருபுறம் இருக்க வடகொரியா விவகாரத்திலும் இருநாடுகளிடையே பூசல் நிலவி வருகிறது. சீனாவின் ஆதரவால் தான் வடகொரியா துணிச்சலாக உள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்பு உத்தரவிட்டால் சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க கடற்படை தளபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது