குண்டர் குழுக்களை அனுப்பி தொழிற்சங்கப் போராட்டங்களை முடக்க அரசாங்கம் முயற்சித்தால் மேலும் போராட்டங்கள் வெடிக்கும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்தார்.
பெற்றோலியத்துறையைச் சேர்ந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் கொலன்னாவையிலிருந்து மரிக்கார் எம்.பி.யின் பாதால உலக குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளால் தொழிற்சங்கப் போராட்டங்களை முடக்க முடியாது. எதிர்காலத்தில் மேலும் பல போராட்டங்கள் வெடிக்கும்.
இதற்கு முகங்கொடுக்கவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார். எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி, விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அங்கீகரிப்பது பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு திட்டமொன்றை தயாரித்து அது குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவைச் சந்தித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குண்டர்களும் அனுப்பப்பட்டு தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸார் வேடிக்கை பார்த்தனர். தாக்குதல் நடாத்த வந்தவர்கள் யார் என்பது ஊடகங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் மேலும் கூறினார்.