பெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகி, ஆவேசப்பட்ட மக்களே ஊழியர்களைத் தாக்கியதாகவும் தான் ஏவிவிட்ட குண்டர்கள்தான் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவது பொய்யாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பெற்றோலியத் துறை ஊழியர்களின் போராட்டத்தில், மரிக்கார் எம்.பி.யின் பாதால உலக குழுக்கள் புகுந்து தாக்குதல் நடாத்தியதாக பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குண்டர்களல்ல, ஆவேசமடைந்த பொதுமக்களே இவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள். இனிமேல் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விதமான இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இது உதாரணமாகும். இது பொது மக்களின் முதலாவது எழுச்சி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.