நடப்பு டென்னிஸ் சீசனில் எஞ்சியுள்ள போட்டித் தொடர்களில் இருந்து முழங்கை காயம் காரணமாக விலகுவதாக முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) அறிவித்துள்ளார்.
முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், 2015 ஜனவரி தொடங்கி 2016 ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 24 போட்டித் தொடர்களில் பங்கேற்றார். அவற்றில் 22 தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அவர் 17ல் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற பிறகு, வேறு எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகிறார்.
2017 ஆஸி. ஓபனில் 2வது சுற்றிலேயே வெளியேறிய அவர், விம்பிள்டன் கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில், முழங்கை காயத்தால் அவதிப்படுவதால் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.