ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 121 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க வீரர்களாக பரத் ஷங்கர், நிலேஷ் சுப்ரமணியன் களமிறங்கினர். நிலேஷ் 19 ரன், ஷங்கர் 40 ரன்னில் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் பாபா இந்திரஜித் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
கவுஷில் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். திருச்சி வாரியர்ஸ் 18.5 ஓவரில் 120 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. விக்னேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பேட்ரியாட்ஸ் பந்துவீச்சில் சுந்தர், ஆகாஷ் தலா 2, மூர்த்தி, டேவிட்சன், கிறிஸ்ட், அவுஷிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி களமிறங்கியது.