முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்சவீட்டை உடனடியாக அமைத்து கொடுப்பதற்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக வெளிச்சவீடு ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 100 ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது முல்லை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி விடயம் தொடர்பான பிரேரணையை சபையில் முன்மொழிந்து சபையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி பிரேரணையை முன்மொழிந்து து.ரவிகரன் உரையாற்றுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் முன்னைய காலத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் இரவு வேளைகளில் வெளிச்சவீட்டின் துணையுடன் கரை திரும்புவார்கள்
எனினும் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்ப ட்ட அந்த வெளிச்சவீடு அழிவடைந்திருக்கும் நிலையில் போருக்கு பின்னராக கடந்த 8 வருடங்களாக முல்லை மாவட்ட மீனவர்கள் தமது அமைப்புக்கள் ஊடாக பல தடவைகள், பலரிடம் தமக்கு வெளிச்ச வீட்டை அமைத்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தபோதும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான முல்லை மாவட்டத்தின் கரையோரத்தில் வாழ்கின்ற சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் வெளிச்சவீடு இல்லாமையினால் பாதிக்கப்படுகின்றார்கள் என துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.