ஜெர்மனியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் வேலைக்கு செல்ல தினமும் ஆற்றை 2 கி.மீ. தூரம் நீந்தி ஊழியர் ஒருவர் அலுவலகம் செல்லும் சம்பவம் நடைபெறுகிறது.
பெருநகரங்களில் அலுவலக பணிக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் உரிய நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
அதை தவிர்க்க ஜெர்மனியின் முனிச் நகரை சேர்ந்த பெஞ்சமின் டேவிட் என்பவர் புதுவிதமான வழியை கையாண்டு வருகிறார். முனிச் நகரில் ரோட்டை ஒட்டி ‘இசார்’ என்ற ஆறு ஓடுகிறது.
அந்த ஆற்றில் நீந்தி தனது அலுவலகத்துக்கு செல்கிறார். தினமும் 2 மணி நேரம் இந்த ஆற்றில் நீந்துகிறார். அப்போது தனது பேண்ட், சட்டை, மேல்கோட்டு, மற்றும் ‘ஷு’க்களை கழற்றி தண்ணீர் புகாத (வாட்டர் புரூப்) பைக்குள் வைத்துக் கொள்கிறார்.
‘லேப்டாப்’ கருவியையும் அந்த பேக்கில் பத்திரப்படுத்தி தனது முதுகில் கட்டியபடி ‘ஹாய்’ ஆக நீந்தி செல்கிறார். அவர் நீந்தும் வழியில் பல பாலங்களை கடந்து செல்கிறார்.
அங்கு அவரை பார்க்கும் சிலர் இவரை பார்த்து கேலி-கிண்டல் செய்து சிரிக்கின்றனர். ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
‘ஆற்றில் நான் நீந்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கிறேன். இதனால் மன அழுத்தம் எதுவும் இல்லை. வழக்கத்தை விட மிக சீக்கிரமாக அலுவலகம் செல்ல முடிகிறது’ என்றார்.