ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக பன்முக திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஷேக் ஹம்தான் விருதை வென்று காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது மாணவி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆரத்ரிகா சிங் ஜம்வால். 11 வயதாகும், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்து அங்குள்ள டெல்லி பிரைவேட் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது தனது சொந்த ஊரான ஜம்முவில் உள்ளார். அவர் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்குவதோடு, பிற கல்வி-சாரா செயல்களிலும் அதிக ஈடுபாடுடையவர்.
ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பன்முக திறமை கொண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதித்துறை மந்திரியும், துபாய் நாட்டின் துணைமன்னருமான சேக் ஹம்தான் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான விருதை ஆரத்ரிகா சிங் ஜம்வால் வென்றுள்ளார். அவர் படிப்பில் சிறந்து விழங்குவதோடு, மற்ற கல்வி-சாரா செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதனால் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விருதிற்கான கோப்பையும், பரிசுத்தொகையாக 30 ஆயிரம் திர்ஹாம் (5.5 லட்ச ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு விருது அளிக்கப்பட்டதற்கு, அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிறு வயதிலேயே சரளமாக பேசும் மேடைப் பேச்சாளர், கராத்தே சாம்பியன், வளர்ந்துவரும் கலைஞர், எழுத்தாளர், சிறந்த நீச்சல் வீராங்கனை, விவேகமாக பதிலளிப்பவர் என பன்முக திறமைக் கொண்டவர் என கூறினார்.