அண்மையில் வெளியிடப்பட்ட ரூமர்கள் (Rumors) அப்பிள் நிறுவனம் மேம்பட்ட ஒரு பாதுகாப்பு பொறிமுறையினை வடிவமைத்து வருவதாகச் சொல்கின்றன. கைவிரல் ரேகைகள் மூலம் பாவனையாளரை அடையாளம் காணும் “டச் ஐடி” (Touch ID) முறைமை இதுவரை காலமும் அப்பிள் சாதனங்களின் பிரதான பாதுகாப்பு பொறிமுறையாக இருந்து வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மேக் கணினியிலும் அப்பிள் “டச் ஐடி” யினை உட்புகுத்தியிருந்தது. ஏனைய நிறுவனங்களின் கைவிரல் அடையாளம் காண் பொறிமுறையை விடவும் மேம்பட்ட “டச் ஐடி” யினை அப்பிள் கைவிடுவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம்?
IPHONE 8
விளிம்புகளற்ற மொபைல் போன்கள்தான் இன்றைய பேஷன். சாம்சுங்கின் கேலக்ஸி S8 (Samsung Galaxy S8) மற்றும் சௌமி (Xiaomi) இன் மிக்ஸ் (Mix) ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே குறுவிளிம்புகளைக் கொண்ட அட்டகாசமான வடிவமைப்பில் வெளிவந்துவிட்டன. குறுவிளிம்பு போன்களின் வடிவமைப்பில் உள்ள மிகப்பெரிய சவால் அதன் பிங்கர்பிரின்ட் (Finger print) அல்லது பயோமெற்றிக் சென்சாரை எங்கே பொருத்துவது என்பதுதான். எல்லா மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் தொடுதிரைக்குக் கீழாக (in-screen) பயோமெட்ரிக் சென்சாரை வைக்கவே விரும்புகின்றன. ஆனாலும் இந்தத் தொழினுட்பம் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதால் குறுகிய விளிம்புகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அவற்றின் பின்பக்கத்தில் (rear) பயோமற்றிக் சென்சாரைக் கொண்டதாக வெளிவருகின்றன.
அப்பிள் நிறுவனம் இந்த பின்புற பயோமற்றிக் ஐடியாவை ஏற்றுக்கொள்ளாது. திரைக்குப் பின்னால் சென்சாரை பொருத்துவதையே விரும்பும். ரூமர்கள் தகவல்கள்படி iPhone 8 குறுகிய விளிம்புகள் கொண்ட முன்பக்கத்தில் எதுவித பிசிக்கல் பட்டின்களும் இல்லாத அதேநேரம் பின்புறத்திலும் “டச் ஐடி” சென்சார் பொருத்தப்படாத வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்றும் “டச் ஐடி” க்கள் கைவிரல்கள் ஈரலிப்பாக உள்ளபோது அதிகமாக சொதப்பும் தன்மை கொண்டவை. இதனால் பின் கோடினை நாம் என்டர் செய்ய வேண்டி ஏற்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒன்றில் அப்பிள் “டச் ஐடி” திரைக்குப் பின்னால் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது “டச் ஐடி” தொழினுட்பம் முழுமையாக ஐபோன் 8 யிலிருந்து அகற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
“பேஸ் பிரிண்ட்”/”பேஸ் ஐடி” தொழினுட்பம்
நம்பகமான ரூமர்களின் (Rumors) அடிப்படையில் அலசும்போது அப்பிள் அதன் iPhone 8 யில் பாவனையாளரின் முகத்தை துல்லியமாக அடையாளம் காணும் 3D Face Recognition தொழினுட்பத்தை உட்பொதிக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.
முப்பரிமாண முக அடையாளம் காணும் தொழினுட்பம் தற்போது பாவனையில் இருக்கும் கமெராக்களை வைத்து முகத்தை அடையாளம் காணும் முறைமையை விடவும் மேம்பட்டவை. கண்ணின் ஐரிசை அடையாளம் காணும் முறையை விடவும் துரிதமானவை. இன்னும் சொல்லப்போனால் கைவிரல் ரேகையை விடவும் அதிகமான முக அடையாளத் தரவுகளை இந்தத் தொழினுட்பம் மூலம் அடையாளப்படுத்த முடியும். இதற்காக அப்பிள் புதிய 3D எஞ்சின் மென்பொருளால் வலுவூட்டப்பட்ட புதிய முப்பரிமாண உணர்தகவுள்ள Facetime கமெரா மற்றும் Infra Red சென்சாரினையும் ஐபோன் 8 யில் பாவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பேஸ் பிரிண்ட்” பாதுகாப்பானதா?
ஏற்கனவே சாம்சுங் தனது புதிய வெளியீடான கேலக்சி S8 யில் முகம், மற்றும் ஐரிசு (Iris Recognition) அடையாளங்களை உட்புகுத்தியிருந்தது. ஆனாலும் அதன் முகமறியும் தொழினுட்பம் பாவனையாளரின் புகைப்படத்தைக் காட்டியே திறக்குமளவிற்கு கேலிக்கூத்தாய் இருந்தது. அதேபோன்று ஐரிசு தொழினுட்பமும் இதே போன்று மொக்கை போட்டது.
அப்பிள் அறிமுகப்படுத்த முயலும் “பேஸ் பிரிண்ட்” தொழினுட்பம் மிகவும் துல்லியமானது. புகைப்படம் போன்ற 2D உருவங்களை அது புறக்கணிக்கும். மற்றும் 3D யில் பாவனையாளரைப் போன்று அச்சொட்டாக வடிவமைக்கப்பட்ட அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட உருவச்சிலை மூலம் மொபைலை திறக்க முயன்றாலும் மொபைலின் இன்ப்ரா ரெட் சென்சார் அதனை புறக்கணிக்கும். இவ்வகை முப்பரிமாண முக அடையாளம் காணும் தொழினுட்பம் கைரேகை சென்சரை விடவும் வேகமானது மற்றும் போனை தொடாமலேயே அதனை அன்லாக் செய்ய முடியும். போனை இயக்குபவரை தொடர்ந்து 3D கமெராவினால் கண்காணித்து பாவனையாளரை உறுதி செய்ய முடியும். அப்பிள் நிறுவனம் இந்த தொழினுட்பத்தை அன்லொக் மற்றும் அப்பிள் பே (Apple Pay) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்போவதாக அறிய முடிகிறது.
பாதகங்கள்
இந்தத் தொழினுட்பத்தை பரீட்சிப்பதற்கு ஏகப்பட்ட முக அடையாளங்களை சேமிக்கவேண்டி ஏற்படும். இது சட்டச்சிக்கல்களை மொபைல்/அப் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டுவரலாம் என்று கூறப்படுகிறது. பார்க்க: Illinois’ Biometric Information Privacy Act
பொதுவாக அப்பிள் நிறுவனம் பாவனையாளரின் கைரேகைகளை அதன் சேர்வர்களில் சேமிப்பதில்லை. அன்லோக்கிங் செயற்பாடு குறிப்பிட்ட சாதனத்தில் மட்டுமே நிகழும். அதே போன்று முக அடையாளமும் அதன் தரவுகளும் குறித்த சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படலாம். இணைய உலகில் ஒருவரது முக அடையாளம் (போட்டோ அல்ல. அதனையும் விடவும் துல்லியமான முகத் தரவுகள்) கசிவது கைவிரல் ரேகைகளையும் விடவும் ஆபத்தானது.
மற்றும் உங்கள் முகத்தை எந்தக் கோணத்தில் வைத்தாலும் உங்கள் மொபைல் அடையாளம் காணுமளவுக்கு துல்லியமான முகத் தரவுகள் பதியப்படும் சாத்தியம் இருக்கிறது. இதன் ஆபத்து இப்படி நிகழலாம்.
உதாரணத்திற்கு உங்கள் முன்னால் வீதியில் நடந்து போகும் உருவரை நோக்கி உங்கள் கமெராவை பிடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கமெரா அந்த நபரின் முக அடையாளத்தை வைத்து இணையத்தில் கசிந்திருக்கும் அந்த நபரின் தரவுகளை (பேஸ்புக் ஐடி, தொலைபேசி இலக்கம், மேலதிக புகைப்படங்கள்) போன்றவற்றை உங்களுக்கு தேடித்தரக்கூடும்.
தகவல்களின் படி மேசையின் மீதிருக்கும் உங்கள் போன் உங்கள் முகம் கண்டு அன்லோக் செய்து கொள்ளுமளவுக்கு அப்பிள் உட்பொதிக்கப்போகும் கமெராக்கள் சக்திவாய்ந்தவையாக இருக்கக்கூடும்.
iPhone 8 யின் வருகைமூலம் இத்தொழினுட்பத்தின் சாத்தியங்கள் மற்றும் சாதக பாதகங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.