அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது பற்றி தாம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
பலர் என்னைக் களமிறங்குமாறு ஊக்குவிக்கிறார்கள், இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன் என்று, 37 வயதான, கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் செய்தியாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் மகளான கிரிசாந்தி மேரிலன்ட் ஆளுனர் பதவிக்குப் போட்டியிடுவதை அங்குள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்.
“கிரிஸ் மிகச் சிறந்த தகைமைகளைக் கொண்டவர்” என்று மார்ட்டின் ஓ மல்லி நிர்வாகத்தில், இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலராக இருந்த ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார். “அவர் மிகச் சிறந்த அனுபவம், தகைமைகளைக் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான மாற்றுத் தலைவர்கள் பணியகத்துக்குத் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.
கிரிசாந்தியின் பெற்றோர் – ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். இவரது சகோதரர், திரு விக்னராஜா, மேரிலன்ட் மாநில பிரதி சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார்.
கிரிசாந்தி ஆளுனர் பதவிக்காக போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது என்று மேரிலன்ட் ஜனநாயக கட்சியின், ஆசிய அமெரிக்க மற்றும் பசுபிக் தீவுகளுக்கான பிரிவின் தலைவரான டேவங் ஷா தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த தகைமையுடைய பெண் என்ற வகையில், இவரது நுழைவு, அரசியலில் எமது சமூகத்துக்கு ஊக்கத்தை அளிப்பதுடன், முதல் சிறுபான்மையின ஆளுனர், மற்றும் முதல் மேரிலன்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுனர் எனப் பல முதன்மைத் தகுதிகளையும் பெறுவார் என்றும் அவர் கூறினார்.
யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெற்ற கிரிசாந்தி இந்த போட்டியில் களமிறங்கினார், 2018 ஜூனில் பிரைமரி தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த பலருடன் போட்டிக்கு முகம் கொடுப்பார்.
ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஐவர் இதுவரையில் இந்தப் பதவிக்காகப் போட்டியிடும் முடிவில் இருக்கின்றனர். பிரைமரி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் மிகப் பிரபலமான குடியரசுக் கட்சியின் ஆளுனர் லாறி ஹோகனுடன் மோத வேண்டியிருக்கும்.
கிரிசாந்த விக்னராஜா இன்னமும் இந்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை. அவர் தனது முடிவை செப்ரெம்பரில் அறிவிக்கவுள்ளார்.
கிரிசாந்தி, யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதமாணிப் பட்டத்தையும், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகளுக்கான முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யேல் சட்டப் பாடசாலையில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான, மிச்சேல் ஒபாமாவின், கொள்கை மற்றும் அனைத்துலக விவகாரங்களுக்கான பணிப்பாளராக இவர் கடமையாற்றினார். இவர் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய போது. உலகில் 60 மில்லியன் பெண்பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் திட்டத்துக்கான முன்முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்கு முன்னர், கிரிசாந்தி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பணியாற்றியிருந்தார். ஐ.நாவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இவரது பெற்றோர் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் இருவரும் பால்டிமோர் நகர பொது பாடசாலையின் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.