அணிகளின் பலத்தை அதிகரித்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது அணிகளுக்கு இழுக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பை வலுப்படுத்துவதற்காக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரை இணைத்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பித்துள்ளது.
இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடந்த புதன்கிழமை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எஜ் விடுதியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த அமைச்சர்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு பசில் ராஜபக்ச கேட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது என இரண்டு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.