யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்கச் சென்ற மெய்ப்பாதுகாவலர்களின் உறவினர்கள் முன்பாக கதறி அழுத நீதிபதி, தனது இரு கைகளையும் கூப்பி மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்குரியவராக இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலாபத்தை சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, யாழ்.மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.