உலகம் முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறிவியல் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கடந்தாண்டில் மாத்திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு மாத்திரமே உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. எனினும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் காரணமாக 19 இலட்சம் பேர் உயிரிழந்தனர். 2017 ஆண்டாகும்போது அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 3 கோடி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்து வருகின்றதென ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகளில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோர் கிழக்கு, தெற்கு ஆபிரிக்காவில் வாழ்கின்றனர். இங்கு ஐ.நா. சபை மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக எச்.ஐ.வி வைரஸ் பரவுவது குறைந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு , வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா பகுதிகளில் எச்.ஐ.வி வேகமாகப் பரவி வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நோய்த்தொற்றுக்கள் 1000 பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.