2015 இலங்கை தொடர்தான் அணியின் மைல்கல் என்று கூறிய கேப்டன் விராட் கோலி, பயிற்சி பற்றி தான் புதிதாக எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்று கருதுவதாகத் தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடர் வெற்றிகள் 2015 இலங்கைத் தொடரிலிருந்தே தொடங்கியதாக விராட் தெரிவித்தார். காலே டெஸ்ட்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு மீண்டெழுந்து அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றதை மைல்கல்லின் தொடக்கம் என்கிறார் கோலி.
ரவி அஸ்வின் 21 விக்கெட்டுகளையும் அமித் மிஸ்ரா 15 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் கொழும்பு புறப்படும் முன் விராட் கோலி அந்தத் தொடரைப் பற்றி நினைவுகூர்கையில் “அணிப் பண்பாடு அப்போது உருவாக்கப்பட்டதே” என்றார்.
“அந்த இலங்கைத் தொடர்தான் எங்களது மைல்கல். அப்போது முதல் வீரர்கள் முதிர்ச்சியடைந்துள்ளனர். 24 மாதங்கள் ஆகிவிட்டது. அயல்நாட்டு மண்ணில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, உள்நாட்டுக்கு வெளியே வெல்லக்கூடிய அணி நம்மிடையே உள்ளது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது அந்தத் தொடரே.
எந்த டெஸ்ட் போட்டியிலும் வெல்வதே குறிக்கோள் என்ற பண்பாட்டை உருவாக்கியது அந்தத் தொடர்தான். காலே டெஸ்ட் போட்டியில் தோற்றது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் மீண்டெழுந்தது அணியில் உருவாகிய பண்பாட்டினால்தான். அதுவும் அணியில் அனுபவம் குறைவான வீரர்கள் இருந்த போது. இலங்கையை ஒப்பிட்டுப் பார்த்தீர்களென்றால் நாங்கள் ஆடிய டெஸ்ட் எண்ணிக்கை அப்போது குறைவு. அயல்நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்ற திறமையைக் காட்டினர், இதுதான் அனைத்தையும் மாற்றியது.
அப்போது முதல் இந்திய அணியின் வெற்றிகளைப் பார்த்து வருகிறீர்கள். இப்போது அயல்நாட்டுத் தொடர்தான், அதே மனநிலைதான். 2015-ல் இருந்த அதே மனநிலை இந்தத் தொடருக்கும் பொருந்தும்.
ரவிசாஸ்திரி பயிற்சி பற்றி…
நானும் அவரும் 2014-16 வரை பணியாற்றியுள்ளோம். எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். எனவே கோச்சிங் பற்றி நான் எதையும் புதிதாகத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்றே கருதுகிறேன். நாங்கள் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியதால் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெரியும், எனவே புரிந்து கொள்ள பெரிய முயற்சி ஒன்றும் தேவையிருக்காது, என்றார்.
ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவார்கள் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும் என்று கங்குலி கூறியதற்கு சூசகமாக கோலி பதிலளித்தது போல் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடந்த தொடர் ஸ்கோர் 0.13 12, 15, 6. ஆனால் இதற்கு முந்தைய தொடர்களில் வெளுத்துக் கட்டினார்.
இதனால் அழுத்தம் உள்ளதா? என்ற கேள்விக்கு, “கூடுதல் அழுத்தம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை, ஏனெனில் என்ன நடக்குமோ அது நடந்தே தீரும். வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இதுதான் என் நம்பிக்கை. ஒரு அணியாக எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையே சாதிக்க முயலுகிறோம். நாம் அனைவருமே கடந்த காலத்தில் கடினப்பாடுகளை கண்டிருக்கிறோம். விமர்சனமும், விமர்சிக்கப்படுவதும் புதிதல்ல.
கேப்டன் பொறுப்பினால் கூடுதல் அழுத்தங்கள் இல்லை. வீரராகவே தொடங்கினேன், அணிக்காக சிறந்ததைச் செய்ய நினைத்தேன். தொடர்ந்து பொறுப்பைச் சுமந்து வருகிறேன். தொடர்ந்து பொறுப்பை எடுத்துக் கொள்வேன். அதாவது நான் கேப்டன் பொறுப்பில் இருக்கும் வரை நான் எனக்கான பொறுப்புகளை முறையே செய்வேன். இப்படியான புறக்காரணிகளை நான் யோசித்துக் கொண்டிருந்தால் நான் அவுட் ஆனால் என்ன என்ற மனநிலையில் களமிறங்குவதற்குச் சமம் எனவே மனநிலைதான் முக்கியம் முன்னகர்வதுதான் முக்கியம்.
புரிதல் மற்றும் தொடர்புபடுத்தும் முறை ஆகியவை வாழ்க்கையின் அனைத்திலும் உள்ளதுதான். அப்படித்தான் ஓய்வறையும். வாழ்க்கையிலும் கூட எந்த ஒரு உறவும் நிலைபெற இத்தகைய அனைத்து விஷயங்களும் தேவை. கிரிக்கெட்டுக்கு மட்டும் இது பொருந்தக் கூடியதல்ல. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உறவுகளில் இத்தகைய அனுபவத்தைக் கடந்து வந்தவர்களே, அதே விதிகள்தான் இதற்கும் பொருந்தும். அதுதான் இதுவும், ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புபடுத்தும் முறை” என்றார் விராட் கோலி.