இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா 2011 உலகக்கோப்பை இந்தியா-இலங்கை இறுதிப் போட்டி மீது தன் ஐயங்களை எழுப்ப, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2011 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
“யாராவது ஒருவர் எழுத்துப்பூர்வ புகார் அளித்தால் விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அன்றைய இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக இருந்த அர்ஜுனா ரணதுங்கா இலங்கை அணியின் ஆட்டம் சந்தேகத்திடமாக இருப்பதாக ஐயம் எழுப்பினார். மேலும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
முந்தைய விளையாட்டு அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று கூறியபோது, மூத்த இலங்கை வீரர் ஒருவர் ஆட்டத்தின் போது ஓய்வறையில் 50 சிகரெட்டுகளுக்கும் மேல் புகைபிடித்ததாகக் குற்றம்சாட்டியதோடு, ஆட்டம் முடிந்த பிறகு உடனேயே கேப்டன் தனது பொறுப்பை உதறுவதாகத் தெரிவித்ததையும் குறிப்பிட்டு தன் ஐயத்தை எழுப்பினார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக தற்போது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து 2011 இறுதிப் போட்டி தோல்வி குறித்த ஐயங்கள் அங்கு எழுந்துள்ளன.
ரணதுங்கா எழுப்பிய சந்தேகத்திற்கு பதிலடியாக சங்கக்காரா, வீர்ர்கள் பாதுகாப்புப் பிரச்சினை இருந்தும் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி பயணிக்கும் முடிவை எடுத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.