ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மான் கொம்பின் ரத்தத்தில் குளிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
ரஷ்ய நாட்டின் அல்தாய் மலைப் பகுதிகளில் காணப்படும் சிவப்பு மான்களின் கொம்புகளிலிருந்து ரத்தத்தை எடுத்து அதைக் குளியல் தொட்டியில் ஊற்றி குளிக்கும் வழக்கம் அந்தப் பகுதிகளில் இருந்துவருகிறது. அந்த ரத்தத்தில் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் இருப்பதாகக் கருதப்படுகிறது. மருத்துவர் அலெக்ஸாண்டர் சூய்கோவின் ஆலோசனையின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சிவப்பு மான்கள் ரத்தத்தில் குளியல் மேற்கொள்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த வருடம் அல்தாய் மலைப் பகுதிகளுக்கு விளாடிமிர் புதின் சென்றார் என்றும், அங்கு அவருக்கு 70 கிலோ அளவுக்கான மான் கொம்பிலிருந்து ரத்தம் தயார் செய்யப்பட்டிருந்தது என்றும், அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கடந்த 10 ஆண்டுகளில் புதின் இதுபோன்று அடிக்கடி சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்களுடைய கொம்புகளை வெட்டும்போது அதற்கு மயக்கமருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை. மான்களைக் கயிற்றால் கட்டி இறுக்கப்பிடித்து கொம்புகள் வெட்டப்படுகின்றன.
இந்தச் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது என்று விலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சிவப்பு மான்களின் கொம்புகள் மருத்துவக் காரணங்களுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த ரத்தத்தில் ஆண்மை விருத்தியை அதிகரிக்கும் தன்மை, எலும்புகள், பற்கள், தசைகள், செவித்திறன், கண்பார்வையை அதிகரிக்கும் தன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.