டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர். இதில், தற்கொலை செய்த விவசாயி மனைவி ஏர் உழுவது போன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில, மத்திய அரசுகளிடம் வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய தென் இந்திய நதிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 102 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதன் 4-வது நாளான இன்று தமிழக விவசாயிகள் ஒரு நூதனப் போராட்டம் நடத்தினர். இதில், கடந்த பிப்ரவரியில் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்காவின் அம்மன்குடியில் தற்கொலை செய்ததாகக் கருதப்படும் ராதாகிருஷ்ணனின் மனைவி ராணி (54) என்பவரும் கலந்து கொண்டார். இருவர் மாடுகள் போல் கலப்பையை இருபுறமும் தாங்கிப் பிடிக்க ராணி தம் வயலில் ஏர் உழுவது போல் நடித்துப் போராட்டம் நடத்தினார். இவரைச் சுற்றி நின்ற தமிழக விவசாயிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் ராணி கூறுகையில், ”என்னுடைய கணவர் அம்மன்குடி கிளையின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.72,000 கடன் வாங்கி இருந்தார். மழை இன்றி இதை திருப்பி செலுத்த முடியாமல் போக அந்த வங்கியின் மேலாளர் வீட்டிற்கு என் கணவரை கடுமையாக மிரட்டினார். அதில், ஜப்தி செய்வதாக மிரட்டியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
இதைத் தாங்க முடியாத எனது கணவர் அந்த வங்கி வாசலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் மீதான எங்கள் புகாரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், வங்கியிடம் புகாரை பெற்று என்னை 5 நாட்கள் சிறையில் தள்ளினர்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணனின் மரணம் ஒரு தற்கொலை என தொட்டியம் முழுவதிலும் பரவலாகப் பேசப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இழப்பீடு தொகையும் அளிக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் மனம் உடைந்த ராணி, டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பிலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். இவர்களும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.