பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கெதிராக கிளிநொச்சி இன்று (19)ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று 10 மணியளவில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் நடைபெற்றது.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று 10 மணியளவில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூநகரி, பளை,கண்டாவளை கரைச்சி பிரதேசங்களைச் சேர்ந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
போலித்தேசியம் பேசாதே, புலிகளை வைத்துப் பிழைக்காதே!, சமூக வேறுபாடுகளை உருவாக்காதே சமூக உறவைக் குலைக்காதே!, சாத்தானின் கைகளில் நீதியா சிறிதரனின் கைகளில் நிர்வாகமா?, வாக்கு வேட்டைக்குத் தமிழ்த் தேசியமா, வயிற்றுப் பிழைப்புக்கு வடக்கத்தையானா?, மன்னிக்கோம் மறக்கோம் – எங்கள் மக்களை இழிவு செய்வதை ஏற்கோம், சிறிதரனே!ஒற்றுமையைக் குலைக்காதே – சமூக உறவினைச் சிதைக்காதே!, மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேள், பாரபட்சங்களை உருவாக்காதே சமூகப் பிளவுகளை உண்டாக்காதே, வடக்கத்தையான் என்று சொன்னதை வாபஸ் வாங்கு வரலாற்றுத் தவறுக்கு வருந்தித் தலைவணங்கு, ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் நாங்கள் ஏமாளிகளில்லை, போராட்டத்தை விற்றுப் பிழைக்காதே பொய்கூறிப் பதவியில் இருக்காதே! போன்ற வாசங்கங் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்:
பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர் இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடியதல்ல. இவ்வாறு ஏற்றத்தாழ்வாகச் சமூகத்தைப் பார்க்கும் ஒருவர் சமூகங்களைச் சமத்துவமாக நடத்துவார் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிப்பதோடு, இதற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.