ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகளவில் தீவிரவாத தாக்குதல் நடந்து வருகிறது. தாலிபான்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகளால் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனால் ஆப்கானிஸ்தான் நாடு நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில் ஆப்கானில் கடந்த ஆறு மாதமாக நடந்த தாக்குதல்களில் சுமார் 1,662 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களில் 20 சதவிகிதம் பேர் தலைநகர் காபூலில் நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் இந்த தாக்குதல்களில் 174 பெண்களும், 436 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இறந்தவர்களைவிட அதிகமாகும். கடந்த மே மாதம் காபூலில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுவே இந்தாண்டு ஆப்கானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். ஐ.நா. சபையின் அறிக்கையில் 2009-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 26,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 49,000 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.