செல்ஃபி மோகத்தின் காரணமாக, அமெரிக்காவில் 2 லட்சம் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள் சேதமடைந்துள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லிங்கன் ஹெய்ட்ஸ் என்ற இடத்தில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில், ஹாங்காங்கைச் சேர்ந்த சிமர் பிர்ச்சினுடைய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஓவியங்கள் முழுவதும் விலை மதிப்புள்ள உலோகங்கள், மரங்கள், நைலான்கள் உள்ளிட்ட பொருள்களால் உருவாக்கப்பட்டிருந்தன.
அந்தக் கண்காட்சியில், ஓவியங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சிக்கு வந்திருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண், ஓவியத்தின் முன்னால் தரையில் மண்டியிட்டு செல்ஃபி எடுக்க முயற்சிசெய்திருக்கிறார். அப்போது, நிலை தடுமாறிய அந்தப் பெண், ஓவியத்தின்மீது சாய்ந்து விழுந்தார். ஓவியங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தால், மொத்தமும் வரிசையாக விழுந்து சேதமடைந்தன.
அதில் சேதமடைந்த ஓவியங்களின் மதிப்பு, 2 லட்சம் அமெரிக்க டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் செல்ஃபி மோகத்தால் ஆபத்தான இடங்களில் நின்று போட்டோக்கள் எடுப்பதும், அதனால் உயிரிழப்பு நேரிடுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது அமெரிக்காவில், செல்ஃபி மோகத்தால் 2 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.