இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்ளக அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்திருந்தார். இதன்படி சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு, விசா வழங்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பில் தீவிர அவதானிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிரியா மற்றும் எகிப்தில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரு நாடுகளிலிருந்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கானா, நைஜீரியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத குடியேற்றம் குறித்தும் கண்காணிக்கப்படுவர். பாகிஸ்தானிலிருந்து வருவோர் அடைக்கலம் கோருவது குறித்தும் கண்காணிக்கப்படுவர். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வருவோரை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், உகண்டாவிலிருந்து வரும் பயணிகள் குறித்து வெகு விரைவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரிய அகதிகளைப் போன்று பல நாடுகளுக்கு ஊடுருவ முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.