சமீபகாலமாக ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் தனுஷ். அந்தவகையில் மலையாள சினிமாவில் ‘தரங்கம்’ என்கிற படத்தை தயாரிப்பதன் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்கிற மலையாள நிறுவனம் தனுஷுடன் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக மலையாள சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான டொவினோ தாமஸ் நடிக்கிறார். இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. டோமினிக் அருண் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மலையாளத்தில் தனது இரண்டாவது படத்தை துவங்கியுள்ளது தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்.. படத்திற்கு பிரபல கால்பந்து வீரரான ‘மரடோனா’வின் பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் டொவினோ தாமஸ் தான் ஹீரோ.. ஷர்மிளா நாயர் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஷ்ணு நாராயணன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகது.