பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் மிகவும் பாரதூரமான சித்திரவதைகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் புள்ளிவிவரங்களும் தன்னிடம் உள்ளதாகவும், சட்டமா அதிபர் கூறும் காரணங்களை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளதாகவும் ஜ.நா.வின் விசேட பிரதி நிதி பென் எமர்சன் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமையினால் தமிழ் மக்களே சித்திரவதையால் மூச்சுத் திணற வேண்டியேற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் இனிமேலும் வருடங்கள் மற்றும் தசாப்தங்களாக காத்திருக்க முடியாதென சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களது வழக்குகளை அரசாங்கம் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்தார். இவர் தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பிலுள்ள ஐ.நா. வளாகத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளுக்கான செயற்பாடுகள் கடந்த வருடத்தின் இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு செல்வது திருப்திகரமாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனது ஆறு வருட கால அனுபவத்தில் இலங்கையில் போன்று உலகில் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சித்திரவதைகள் முன்னெடுக்கப்பட்டமையை கண்டதில்லை.
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் தான் நேரில் பார்த்த அனுபவங்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.