ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சி இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 240 மில்லியன். ஆனால் இந்தியாவிலோ 241 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கின் பயனர்களாக உள்ளனர்.
உலகளவில் ஒவ்வொரு மாதமும் 2 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த சில நாட்களிலேயே இந்த புதிய பட்டியலும் வெளியாகியுள்ளது. தேசம் வாரியாக ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அண்மைக்காலங்களில், இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது, கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 12% மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆண்களே அதிகம்
இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்போரில் 75% பேர் ஆண்களாகவே இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் 54% பேர் பெண்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர்.