இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. மேலும் எந்தவித கவலையும் இல்லாமல் லண்டனில் உற்சாகமாகப் பொழுதைக் கழித்து வருகிறார் மல்லையா. கிரிக்கெட் போட்டிகளுக்கு செல்வது, விம்பிள்டன் டென்னிசுக்குப் போவது, குதிரைகள் பந்தயம், கார் பந்தயம் என தம் மீது இருக்கும் வழக்குகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் விஜய் மல்லையா ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே இந்தியாவை மிஸ் செய்வது போல் ஃபீலிங்கே ஏற்படவே இல்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற எஃப்- 1 கார் பந்தயத்துக்கு சென்ற விஜய் மல்லையாவிடம் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த மல்லையா இந்தியாவை மிஸ் பண்ற ஃபீலிங்கே எனக்கு இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் எனது ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் கூட பிரிட்டனில்தான் வசிக்கின்றனர். பின்னர் நான் இந்தியா பற்றி ஏன் யோசிக்க வேண்டும்.
உறவுமுறையில் இந்தியாவில் நான் யாரையும் மிஸ் பண்ணவில்லை. பிரிட்டன் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் மல்லையா கூறியுள்ளார். இந்தியாவில் பொருளாதார குற்றங்களை புரிந்தவர்களை ஒப்படைக்கும்படி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ள நிலையில் விஜய் மல்லையாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.